ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள நான்கு ஆட்டங்கள் கொண்ட ஹாக்கி டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய ஆண்கள் அணி தற்போது அங்கு தங்கி உள்ளது. ஆஸி பயணத்திற்கு முன்பு, பெங்களூரில் வீரர்களுக்கான தீவிரப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. அந்த முகாம் முடிந்ததும், ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி ஆகஸ்ட் 8ஆம் தேதி பெங்களூரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது.
போட்டிகள் நடைபெறவுள்ள பெர்த் நகரில் முகாமிட்டுள்ள இந்திய அணி, தற்போது கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. தொடரின் முதல் டெஸ்ட் ஆட்டம் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.
இந்த மாத இறுதியில் பீகாரின் ராஜ்கிரியில் ஆண்கள் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற உள்ளது. அந்தப் போட்டிக்கான அணியைத் தேர்வு செய்யவும், வீரர்களின் ஆட்டத் திறனை மேம்படுத்தவும், இத்தொடரை இந்திய அணி முக்கியமாகக் கருதுகிறது.
ஆண்கள் ஹாக்கி உலக தரவரிசையில், ஆஸ்திரேலியா 5வது இடத்திலும், இந்தியா 8வது இடத்திலும் உள்ளன. இதனால், பெர்த் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையிலான மோதல் ஹாக்கி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.













