சேலம் மாவட்டம் மேட்டூர் புதுக்காலனியைச் சேர்ந்த மகாதேவ் என்ற இளைஞர், இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். 2021-ஆம் ஆண்டு, பொதுப்பணித்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கொங்கணாபுரத்தைச் சேர்ந்த நித்தியானந்தம் மற்றும் இவரது கூட்டாளிகள், அவரிடம் ரூ.22 லட்சத்தை பெற்றனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் மகாதேவ் அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அரசு வேலை வாங்கித் தருவதாக நித்தியானந்தம், சந்தோஷ்குமார் உள்ளிட்ட ஆறு பேர், மேட்டூர் மற்றும் இடைப்பாடி பகுதிகளைச் சேர்ந்த 33 இளைஞர்களிடமிருந்து மொத்தம் ரூ.3.50 கோடி பறித்தது தெரியவந்தது.
இந்த வழக்கில், நித்தியானந்தம் முன்பே கைது செய்யப்பட்டார். மீதமுள்ள ஐந்து பேரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். அதில், கொங்கணாபுரம் காளிப்பட்டி ரோட்டில் வசிக்கும் சந்தோஷ்குமார் (எ) சந்தோஷ்பாண்டி (51), சேலம் சித்தனூரில் இருப்பதாக தகவல் கிடைத்தது. நேற்று தனிப்படை போலீசார் அங்கு சென்று அவரை பிடித்தனர்.
விசாரணையில், சந்தோஷ்குமார் சேலம் தீவட்டிப்பட்டியில் நர்சிங் கல்லூரி நடத்தி வருவதும், அரசு வேலை வாங்கித் தருவதாக பல இளைஞர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்ததும், அந்த பணத்தில் சொத்துகள் வாங்கி குவித்ததும் உறுதியானது. தற்போது அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.













