தமிழகத்தில் புதிய டிஜிபி (Director General of Police) நியமனத்தைச் சுற்றிய வழக்கில், “நீதிமன்றம் தலையிட விருப்பமில்லை; வழக்கு பைசல் செய்யப்படுகிறது” என மதுரைக் கிளை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 31 அன்று நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை அரசு துவங்க வேண்டும்.
பொறுப்பு டிஜிபியை நியமிக்கக் கூடாது எனக் கோரி, மதுரைக் கிளை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 14) காலை விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள்,
“புதிய டிஜிபி தேர்வு நடைமுறை துவங்கியுள்ளதா, இல்லையா என்பதைக் குறித்து தமிழக அரசு தரப்பு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தெரிவிக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்தனர்.
பிற்பகல் மீண்டும் விசாரணை நடந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் அஜ்மல் கான்,
“உள்துறை செயலாளரிடம் விபரம் பெற்றேன்; புதிய டிஜிபி நியமன நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கி, தற்போது நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.
இதையடுத்து, “இச்சூழலில் நீதிமன்றம் தலையிட விருப்பமில்லை; வழக்கு பைசல் செய்யப்படுகிறது” எனக் கூறி, மதுரைக் கிளை உயர் நீதிமன்றம் விசாரணையை முடித்தது.













