திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் குஜிலியம்பாறை, எரியோடு, வடமதுரை ஆகிய பகுதிகளில் அரசு அனுமதியின்றி வாஷிங் மணல் ஆலைகள் அரசு அதிகாரிகள் ஆதரவோடு பல ஏக்கர் பரப்பளவில் செயல்படுவதாக காவிரி படுகை விவசாயிகள் சங்கத்தின் சார்பாக ட்ரோன் மூலம் வீடியோ எடுக்கப்பட்டு வீடியோ ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்களிடம் புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவின் பேரில் கனிமவள சுரங்கத்துறை அதிகாரி செல்வசேகரன், வேடசந்தூர் வட்டாட்சியர் சுல்தான், மண்டல துணை வட்டாட்சியர் அய்யலூர் வருவாய் ஆய்வாளர், கொல்லப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கொண்ட குழுவினர் வடமதுரையை அடுத்த மோர்பட்டி கிராமம் கொப்பம்பட்டியில் ஏக்கர் பழனியாண்டவர் கிரிட் என்ற பெயரில் பெரிய மெஷின்கள் மூலம் போலி மணல் தயாரிக்கும் பிளான்ட் செயல்பட்டு வந்ததை கண்டறிந்து உடனடியாக தடுத்து நிறுத்தி சீல் வைத்தனர்.

மேலும் வடமதுரை காவல் நிலையத்தில் பழனியாண்டவர் கிரிட் பிளான்ட் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த அனைத்து பகுதிகளிலும் சோதனை நடைபெறும் என கனிமவள சுரங்கத்துறை அதிகாரி செல்வசேகரன் தெரிவித்தார்













