தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மானியம் நிறுத்தப்பட்டதால் கீரை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடு, ரத்தசோகை தடுப்பு கண் ஆரோக்கியம், எலும்பு பலம், உடல் எடை குறைப்பு, நோய் எதிர்ப்புச் சக்தியாகவும் விளங்குகிறது. இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் உண்ணலாம். என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு பல்வேறு மருத்துவ குணம் கொண்ட கீரையை தேனி மாவட்டத்தில் கோட்டூர், சீலையம்பட்டி, சிந்தலச் சேரி, போடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 150 க்கும் மேற்பட்ட ஏக்கரில் அரைக்கீரை, பொன்னாங்கண்ணி, தண்டங்கீரை, சிறுகீரை என பல்வேறு கீரை வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வந்தன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தேவாரம், போடி பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தினால் விவசாயிகள் மானாவரி சாகுபடிக்கு மாறினர். கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் நெல், வாழை, திராட்சை, தக்காளி, வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் கீரை விவசாயம் குறைய தொடங்கியது. இதனையடுத்து கீரை விவசாயத்தை ஊக்குவிக்க தமிழக அரசு ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கீரை விவசாயம் செய்த விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டருக்கு (இரண்டரை ஏக்கர்) ரூ. 7,500 மானியமாக கொடுத்து வந்தது. இந்த திட்டம் திடீரென சில நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இது குறித்து நமக்கு அளித்த சிறப்பு பேட்டியில், விவசாயி குமார் கூறுகையில், ஆண்டு முழுவதும் கீரை விவசாயம் இம்மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் கீரை விவசாயம் பாதிக்கப்பட்டபோது தமிழக அரசு மானியம் வழங்கி வந்தது. ஆனால் திடீரென மானியம் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் மாற்று விவசாயத்தில் ஈடுபட தொடங்கினர். இதன் காரணமாக கீரை சாகுபடியின் பரப்பளவு குறைந்து வருகிறது. என்றார். இது தொடர்பாக தோட்டக்கலைத
துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது, ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் 20 மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மத்திய அரசின் திட்டமான தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பசுமை குடில் நிழல் வலைகள் அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் கீரை சாகுபடிக்கும் மானியம் கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
ஆர்.சௌந்தர்
சிறப்பு நிருபர்













