திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் NIA அதிரடி சோதனை
திண்டுக்கல் பேகம்பூர் ஜின்னாநகரை சேர்ந்த சேக்அப்துல்லா. இவர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொருளாளராகவும் இருந்து வருகிறார். இவரது வீட்டிற்கு இன்று காலை 6 மணிக்கு வந்த தேசிய புலனாய்வு முகமை(NIA) அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர சோதனைக்கு பிறகு வீட்டில் இருந்த ஆவணங்கள், சேக்அப்துல்லா மற்றும் அவரது மனைவியின் செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து சென்றனர்.
விசாரணை முடிவுற்ற நிலையில் வருகிற 25ந்தேதி சென்னையில் என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு நேரில் ஆஜராக வேண்டும் என அவர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டது. இந்த சோதனையால் அப்பகுதியில் ஏராளமானோர் அங்கு திரண்டு சோதனையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரம், 12-வது வார்டு பகுதியான சம்சுதீன் காலனியில் முகமது யூசுப் மகன் முகமதுயாசின்(35) என்பவருடைய வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் இன்று தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில்
என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகமது யாசின் பயன்படுத்தி வரும் செல்போன் மற்றும் வீட்டில் உள்ள அவரின் முக்கிய ஆவணங்கள், டைரிகள் உள்ளவற்றை கைப்பற்றினர். முகமதுயாசின் ஏற்கனவே அரசால் தடை செய்யப்பட்டுள்ள இயக்கமான பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்ற இயக்கத்தில் உறுப்பினராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 5ந் தேதி கும்பகோணத்தில் மதமாற்ற நடவடிக்கைகளை எதிர்த்து போராடிய ராமலிங்கம் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை காவல்துறையினருக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
வத்தலக்குண்டு காந்திநகர் கணவாய்ப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட குறிஞ்சி நகரில் உமர் கத்தாப் (72) என்பவர் வீட்டிலும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றது. ராமலிங்கம் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இவரது மருமகன் முகமதுஅலிஜின்னா என்பவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதன்பின் முகமது அலி ஜின்னாவின் மகள் நிஷா தற்போது தந்தை உமர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் டி.எஸ்.பி.சஞ்ஜீவ்மோன் தலைமையில் வந்த 5 பேர் கொண்ட
அதிகாரிகளும், வங்கி அதிகாரிகள் 2 பேரும் சோதனை மேற்கொண்டனர் சட்டவிரோதமாக இவர்களது வங்கி கணக்கிற்கு பணப்பரிமாற்றம் நடந்ததா? என்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
கொடைக்கானலில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றது கொடைக்கானல் பில்லிஸ் வில்லா பகுதியில் உள்ள 2 இடங்கள், அப்சர்வேட்டரி சாலை, கான்வென்ட் ரோடு மற்றும் மேல்மலை கிராமமான பூம்பாறை பகுதியில் ஒரு இடத்திலும் கொடைக்கானல் அண்ணா சாலையில் முபாரக் என்பவரது வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும் ஆம்பூர் பிரியாணி கடை வைத்து நடத்தி வரும் உரிமையாளர் இம்தாத்துல்லாவின் கொடைக்கானல் வீட்டிலும் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு இம்தாத்துல்லாவை NIA- அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த சம்பவங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
R. மோகன் கணேஷ்,
திண்டுக்கல் மாவட்டம் செய்தியாளர்













