இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்டிங் நாயகன் லியாம் லிவிங்ஸ்டன், தனது வெடிக்கும் ஆட்டத்தால் உலக கிரிக்கெட்டில் புதிய சாதனையைப் பதித்துள்ளார். உலகின் முன்னணி டி20 சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஆப்கானிஸ்தானின் ரஷித் கானுக்கு எதிராக, இதுவரை எவரும் எட்டாத ஒரு மைல் கல்லை அடைந்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ‘தி ஹன்ட்ரெட்’ தொடரின் பிர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் மற்றும் ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில், பிர்மிங்ஹாம் அணிக்காக களமிறங்கிய லிவிங்ஸ்டன், ரஷித் கான் வீசிய 8 பந்துகளில் 32 ரன்களை குவித்தார். இதன்மூலம், டி20 போட்டிகளில் ரஷித் கானுக்கு எதிராக 200 ரன்களை கடந்த உலகின் முதல் வீரராக உருவெடுத்தார்.
ஏற்கனவே டி20 வடிவில் அதிவேக சதம் (42 பந்துகள்) மற்றும் அதிவேக அரைசதம் (17 பந்துகள்) என்ற சாதனைகளைப் பெற்றுள்ள லிவிங்ஸ்டன், இந்த புதிய உலகச் சாதனையால் தனது சாதனைப் பட்டியலில் மேலும் ஒரு பிரகாசமான அத்தியாயத்தைச் சேர்த்துள்ளார். ரஷித் கானுக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்தவராகவும் (மொத்தம் 21 சிக்ஸர்கள்) அவர் முதலிடத்தில் உள்ளார்.
டி20 வரலாற்றில், ஒரே பந்துவீச்சாளருக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த சாதனை வெஸ்ட் இண்டீஸின் ஆண்ட்ரே ரசல் வசம் உள்ளது; அவர் தனது சக வீரரான டுவைன் பிராவோவுக்கு எதிராக 345 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல், ஒரே பந்துவீச்சாளருக்கு எதிராக அதிகபட்சமாக 30 சிக்ஸர்கள் அடித்த சாதனையும் ரசலுக்கே சொந்தம் – அதுவும் பிராவோவுக்கு எதிராகவே.
ஆனால், ரஷித் கான் போன்ற உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளருக்கு எதிராக லிவிங்ஸ்டன் சாதித்த இந்த வெற்றிக்கொடி, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.













