அமெரிக்காவின் ஒஹியோ மாநிலம் சின்சினாட்டியில் நடைபெறும் வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று காலிறுதிக்கு முன்னான 4வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில், உலக தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் (23), பிரான்சின் அட்ரியன் மன்னாரினோ (37, 89வது இடம்) ஆகியோர் மோதினர். ஒரு மணி 48 நிமிடங்கள் நீடித்த கடும் போராட்டத்தில், சின்னர் 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று முதல் வீரராக காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் (22, 2வது இடம்) மற்றும் இத்தாலியின் லுகா நார்டி (22, 98வது இடம்) களமிறங்கினர். இதில் கார்லோஸ், வெறும் ஒரு மணி 20 நிமிடங்களில் 6-1, 6-4 என நேர்செட்களில் வெற்றி பெற்று காலிறுதியில் இடம்பிடித்தார்.
தகுதிச் சுற்று மூலம் முதன்மை சுற்றுக்குள் நுழைந்த பிரான்ஸ் வீரர் டெரென்ஸ் அத்மன் (23, 136வது இடம்), 4வது சுற்றில் அமெரிக்காவின் முன்னணி வீரர் டெய்லர் ஃப்ரிட்ஸை (27, 4வது இடம்) எதிர்கொண்டார். இரு மணி நேரம் நீடித்த ஆட்டத்தில், 3-6, 7-5, 6-3 என செட்களில் வெற்றி பெற்று, ஏடிபி போட்டிகளில் தனது முதல் காலிறுதி வாய்ப்பைப் பெற்றார்.













