திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா (40), தனது மனைவியுடன் கடந்த ஒரு வருடமாக பல்லாவரம் அருகே பொழிச்சலூர், நேரு நகர், குமரன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அங்கு உள்ள உணவகத்தில் சமையல்காரராக பணியாற்றி வந்த அவர், 20 ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டம் கல்லுப்பட்டியைச் சேர்ந்த சரண்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்த்தி மற்றும் சங்கீதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
சமீபத்தில், சரண்யாவின் பூர்வீக நிலத்தை, அவரது தந்தை அழகர்சாமி (55) விற்றார். ஆனால், அந்த விற்பனைத் தொகையில் மகளுக்கான பங்கை வழங்கவில்லை. இதனால் ராஜா கடும் மனக்கசப்பில் இருந்தார்.
இந்நிலையில், தேனியில் இருந்து அழகர்சாமி, மகளைப் பார்க்கப் பொழிச்சலூருக்கு வந்திருந்தார். அப்போது, சொத்து பண விவகாரம் குறித்து மருமகன் ராஜா மற்றும் மாமனார் அழகர்சாமி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் வன்முறைக்கு தள்ளப்பட்ட நிலையில், ராஜா வீட்டின் அருகே இருந்த இரும்பு கம்பியை எடுத்து மாமனாரின் தலையில் தாக்கினார். பலத்த காயமடைந்த அழகர்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சங்கர் நகர் போலீசார், உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர், வழக்குப் பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். இந்த சம்பவம், பல்லாவரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













