சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடன் பெறும் நாடுகளில் முதலிடத்தில் பாகிஸ்தான் நீடிக்கிறது. 1989 முதல் கடந்த 35 ஆண்டுகளில், 28 ஆண்டுகள் IMF உதவியை நாடியுள்ள அந்நாடு, திட்ட நிபந்தனைகளைப் பின்பற்றாத பழக்கத்தால் கடன் வலையில் சிக்கிக் கொண்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில், 4 IMF திட்டங்களை பாகிஸ்தான் முறையாகக் கடைப்பிடித்திருந்தால், மீண்டும் கையேந்த வேண்டிய அவசியமே இருந்திருக்காது என நிபுணர்கள் கூறுகின்றனர். ராணுவத்தின் அரசியல், பொருளாதார கொள்கைகளில் ஆழ்ந்த தலையீடு, அந்நாட்டின் நெருக்கடியின் முக்கியக் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும், IMF வழங்கிய நிதியை எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்துக்கு பயன்படுத்துவதாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.
வரும் செப்டம்பரில் IMF, பாகிஸ்தானின் செயல்திறனை மதிப்பாய்வு செய்ய உள்ளது. இதில் சாதகமான முடிவு வந்தால் மட்டுமே, அடுத்த கட்டமாக 1 பில்லியன் அமெரிக்க டாலர் கிடைக்கும். ஆனால், பாகிஸ்தான் தற்போது 5 முக்கிய நிபந்தனைகளில் 3-ஐ பூர்த்தி செய்யத் தவறியுள்ளது.
- மாநில சேமிப்பு இலக்கு: உறுதியளித்த 1.2 டிரில்லியன் ரூபாயில், 921 பில்லியன் ரூபாய் மட்டுமே சேமிப்பு. (280 பில்லியன் பற்றாக்குறை)
- வரி வசூல் இலக்கு: 12.3 டிரில்லியன் ரூபாய் இலக்கை அடையத் தவறியது.
- தாஜிர் தோஸ்த் திட்டம்: சிறு வியாபாரிகளிடமிருந்து 50 பில்லியன் ரூபாய் வரி வசூலிக்கும் முயற்சி முற்றிலும் தோல்வி.
இதற்கு மேலாக, சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்ட நிபந்தனைகள் பூர்த்தியாகாததால், உலக வங்கி 500 மில்லியன் டாலர் கடன் வழங்கும் திட்டத்தை ரத்து செய்துள்ளது. புதிய நிதி உதவிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
நிதி நெருக்கடி, கடன் பற்றாக்குறை, மற்றும் நிபந்தனை மீறல்கள் — மூன்றின் சங்கிலியில் சிக்கிய பாகிஸ்தான், IMF உதவி பெறும் வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளது.













