தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை வலுக்கட்டாயமாக கலைத்த திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
“தூய்மைப் பணியாளர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, சென்னையில் 13 நாட்களாக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், திமுக அரசு, இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான காவல்துறையினரை கொண்டு வந்து, போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியது மனிதாபிமானமற்ற செயல். நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய ஒடுக்கப்பட்ட மக்களை குற்றவாளிகள் போல அடித்து, துன்புறுத்தி அகற்றிய அரசையும், அதன் ஏவல்துறையையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்த சில நிமிடங்களிலேயே திமுக அரசு காவல்துறையை குவித்து, போராட்டக்காரர்களின் மீது தங்கள் அடக்குமுறையை வெளிப்படுத்தியது. ஒரு புறம், முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஷூட்டுக்காக தூய்மைப் பணியாளர்களுடன் தேநீர் அருந்தி, உணவு உண்டதை பெருமையாகச் சொல்வதோடு, உண்மையான பிரச்சினை வந்தபோது மக்களை நேரில் சந்திக்க கூட முன்வரவில்லை. இது வெட்கக்கேடு” என்றும் கூறினார்.
அதோடு, “மக்களின் வாழ்வாதாரத்திற்காக போராடும் ஏழை எளிய மக்களை ஒடுக்கி, அவர்களின் ஜனநாயக உரிமையை பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா? ஆளும் அரசு எந்த மக்களை காயப்படுத்துகிறதோ, அதே மக்களின் கரங்களால் இந்த அராஜக ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படும்” என நயினார் நாகேந்திரன் எச்சரித்தார்.













