உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கி இன்று ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், அதன் மூலம் பயனடைந்த மக்களின் விவரங்களை வெளிப்படுத்துமா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக மக்களுக்கு 46 விதமான சேவைகளை வழங்கும் நோக்கில், கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், 31 நாட்களில் 2,500-க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டன. ஆனால், இம்முகாம்களில் சேவை பெற்ற மக்களின் விபரங்கள் குறித்து அரசு இதுவரை எதுவும் வெளியிடவில்லை என அன்புமணி குற்றம்சாட்டினார்.
செய்திகளின்படி, மாநிலம் முழுவதும் நடைபெற்ற முகாம்களில் மொத்தம் 25 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதில், 12 லட்சத்திற்கும் அதிகமானவை மகளிர் உரிமைத் தொகை கோரி தாக்கல் செய்யப்பட்டவையாகும். ஆனால், அந்த விண்ணப்பங்களில் ஒருவருக்குக் கூட இதுவரை தொகை வழங்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
அன்புமணி, “முகாம்களில் விண்ணப்பங்கள் அனைத்தும் உடனடியாக சரிபார்க்கப்பட்டு, தேவையான ஆவணங்களும் சரிபார்க்கப்படுகின்றன. எனவே, அதிகபட்சம் இரண்டு நாளில் மகளிர் உரிமைத் தொகை குறித்து முடிவு எடுக்க முடியும். ஆனால், ஒரு மாதத்தில் 12 லட்சம் விண்ணப்பங்களிலும் எதற்கும் இன்னும் செயல்பாடு இல்லை” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், “உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கிய நாளிலிருந்தே, இது ஒரு ஏமாற்றுத் திட்டம் என்று நான் கூறி வந்தேன்; இன்று அது நிரூபணமாகி வருகிறது. இன்னும் எவ்வளவு காலம் மக்கள் ஏமாற்றப்படுவார்கள்?” என அன்புமணி தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.













